திருச்சி: மண்ணச்சநல்லூர் அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள காப்புக்காட்டில் யானைகள் மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அனுமதி இன்றி தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் மீட்கப்பட்டு, இந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது இந்து, சந்தியா, ஜெயந்தி, மலாச்சி, இந்திரா, கோமதி, சுமதி உள்ளிட்ட 10 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த 10 யானைகளுக்கும் தலா ஒரு பாகன்களும் உள்ளனர். இந்நிலையில், திருநெல்வேலி பகுதியில் அனுமதி இல்லாமலும், போதிய பராமரிப்பு இல்லாமலும் வளர்க்கப்பட்ட யானையை பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்துவதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதனையடுத்து அந்த புகாரின் அடிப்படையில், வனத்துறையினர் சுமார் 58 வயதான ஜெயின்னி என்ற பெண் யானையை மீட்டு, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.
மறுவாழ்வு மையத்திற்கு புதிதாக வந்துள்ள ஜெயின்னி யானையை, தலைமை வனப் பாதுகாவலர் சதீஷ் ஆலோசனையின்படி, திருச்சி மாவட்ட வன அலுவலர் சோமேஸ் சோமன், உதவி வனப் பாதுகாவலர் சம்பத்குமார் மற்றும் வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம் ஆகியோர் பார்வையிட்டனர்.