திருச்சி:அந்தநல்லுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரன் அப்பகுதி மக்களிடமிருந்து வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்ற வரிகளை வசூல் செய்து, அந்த தொகையை ஊராட்சி நிதியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அளித்த புகாரின் பெயரில் மாவட்ட நிர்வாகம் விக்னேஸ்வரனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் மல்லியம்பத்து ஊராட்சியில் தலைவராக பதவி ஏற்ற நாளில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி போலியான ரசீதுகள் மூலம் 74 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது.
ஊராட்சி தலைவராக பதவி ஏற்ற போது எடுத்த உறுதி மொழியை மீறி அரசுக்கு எதிராக செயல்பட்டு உள்ளதால், 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பஞ்சாயத்ராஜ் சட்டப்படி, ஊராட்சி தலைவரின் ‘செக் பவர்’ பறிக்கப்பட்டது.
விளக்கம் கோரப்பட்டு 4 மாதமாகியும் ஊராட்சித் தலைவர் தரப்பில் உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிக்கப்படவில்லை. அதனால் ஆட்சியர் உத்தரவுப்படி கடந்த மாதம் 7ம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகர் ஊராட்சி உறுப்பினர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடத்தி ஆட்சியரிடம் அறிக்கை சமாப்பித்தார்.
அதன்படி மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விகனேஷ்வரனுக்கு ஆட்சியர் அனுப்பிய கடிதத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்தையும், அதன் அறிக்கையை பரிசீலனை செய்ததில் ஊராட்சி மன்றத் தலைவரின் நிதி முறைகேடுகள் வெளிப்படையாக நிரூபணமாகி உள்ளது.
அவர், தொடாந்து அந்த பதவியில் இருப்பது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திற்கு புறம்பானதாகவும் பொது நிதிக்கும் அரசு நிதிக்கும் தொடர்ந்து, ஊறு விளைவிக்கும் விதமாக அமையும் என்பதால் மல்லியம்பத்து ஊராட்சி மன்றத் தலைவர் விக்னேஷ்வரன் என்பவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார், என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க:லூதியானா பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்..