திருச்சி: முசிறி தாலுக்கா தா.பேட்டை அருகே கொழிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (66) விவசாயி. இவருக்கு மனைவியும், இரண்டு மகள், ஒரு மகனும் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் செல்லதுரை (52) ஆடுகள் மேய்த்தும்,
கூலிவேலையும் செய்து வாழ்ந்து வருகிறார்.
அவ்வப்போது மிகுந்த மன அழுத்தத்துடன் செல்லதுரை கிராமத்தில் சுற்றித் திரிவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு துரைராஜ் வயலில் இருந்து வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். வீட்டின் அருகே வந்தபோது பின்னால் அரிவாளுடன் வந்த செல்லதுரை, விவசாயி துரைராஜை அறிவாளால் சரமாரியாக வெட்டி, கீழே சாய்த்து தலையை கையில் பிடித்து அறிவாளால் கொத்தி உள்ளார். இதில் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே துரைராஜ் இறந்து போனார்.
துரைராஜை வெட்டிய போது செல்லதுரையின் கைகளிலும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்து ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த துரைராஜின் அருகிலேயே அமர்ந்திருந்த செல்லதுரை சற்று நேரத்தில் அவர் அருகிலேயே படுத்துக் கொண்டுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து தா.பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.