தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இதிலும் போதிய வருமானம் கிட்டவில்லை... அரசு தான் உதவி செய்யனும்' - வெள்ளரிக்காய் விற்பனை செய்யும் கட்டடத் தொழிலாளி கோரிக்கை - trichy news

திருச்சி: ஊரடங்கு உத்தரவால் 25 வருடமாக கட்டடத் தொழிலாளியாக இருந்த ஒருவர் வாழ்வாதாரத்துக்காக வெள்ளரிக்காய் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இத்தொழிலும் போதிய வருமானம் கிட்டவில்லை என்பதால் நிதியுதவி செய்யுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

A construction worker who sells cucumbers for a living
A construction worker who sells cucumbers for a living

By

Published : May 6, 2020, 1:06 PM IST

Updated : May 6, 2020, 1:38 PM IST

கரோனா தொற்று காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில் துறையினர் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியுள்ளனர். பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் இலவசமாக அத்தியாவசிய பொருள்களை வழங்கினாலும் அன்றாடம் தொழில் செய்து பிழைப்பு நடத்திவந்தவர்களின் வாழ்க்கை திண்டாட்டமாகியுள்ளது.

இவர்கள் மட்டுமில்லாமல் அமைப்புசாரா தொழில் செய்பவர்களுக்கும் தற்போது வேலையில்லாமல் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர். இவர்கள் பணம் ஈட்ட அத்தியாவசிய பொருள்களை விற்கும் தற்காலிக தொழிலில் ஈடுபட்டு பொருளாதாரச் சுமையை தங்களால் இயன்றவரை குறைக்க முயற்சி செய்கின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்தவர் வடிவேலு. இவர் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்தச் சூழலில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

இதனால் வேலையில்லாமல் தவித்துவந்துள்ளார். மற்ற தொழில்களுக்கு அனுமதி வழங்காவிட்டாலும் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்வதற்கு அரசு அனுமதியளித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, தற்போது கோடை வெயில் வாட்டி வருவதால் வெள்ளரிக்காய்களை விற்கும் தொழிலில் இறங்கியுள்ளார். வாழ்வாதாரத்திற்காக தனக்கு பழக்கமில்லா தொழிலில் இறங்கியும் மக்களிடையே வரவேற்பில்லை என்று வேதனை தெரிவிக்கிறார் அவர்.

இதுதொடர்பாகப் பேசிய அவர், “ஊரடங்கு காரணமாக கட்டட வேலையில்லாமல் போனதால் என்ன செய்வது என்று விழிபிதுங்கியிருந்தேன். அப்போது தான் வெள்ளரிக்காய் விற்பனை செய்யும் எண்ணம் எனக்கு தோன்றியது. அதன்படி காய்கறிச் சந்தையில் மொத்த விலைக்கு வெள்ளரிக்காய்களை வாங்கி, சில்லறைக்கு விற்பனை செய்கிறேன்.

வெள்ளரிக்காய் விற்பனை செய்யும் வடிவேலு பேட்டி

ஒரே ஊரில் விற்பனை செய்தால் போதிய வருமானம் ஈட்ட முடியாது என்று எண்ணி, என்னுடைய இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்துவந்தேன். கடந்த 20 நாள்களுக்கும் மேலாக வியாபாரம் செய்கிறேன். ஊரடங்கு காரணத்தால் கிராமப்புற மக்களிடம் சரியாக பணப்புழக்கம் இல்லாததால், செலவு செய்வதை அவர்கள் விரும்பவில்லை.

குறிப்பாக, நகர்ப்புற மக்களிடம் காசு இருந்தாலும் அவர்களும் கரோனாவைக் காரணம் காட்டி வாங்க மறுக்கின்றனர். இதனால் இந்தத் தொழிலிலும் எனக்கு போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை. இருந்தாலும் அன்றாட பிழைப்பு நடத்துவதற்காக தொடர்ந்து வியாபாரம் செய்கிறேன். வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Last Updated : May 6, 2020, 1:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details