திருச்சி: மணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மனைவி செல்லபாப்பா (வயது 60) இவருக்கு ரமேஷ், ஜெகதீசன் என இரு மகன்கள் உள்ளனர். கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது மகன் ரமேஷ் உடன் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகனான ஜெகதீசன் (வயது 41) சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் அங்கு பணிபுரிந்த கோமதி (வயது 33) என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டு கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராஜேஷ், வனிஷா என இரு குழந்தைகள் உள்ளனர்.
இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் ஊர் மக்கள் இந்த காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில் அந்த ஊர் கோவில் திருவிழா சமயத்தில், ஜெகதீசனிடம் தலைக்கட்டு வரியை அவ்வூர் முக்கியஸ்தர்கள் வசூல் செய்வதை தவிர்த்தனர்.ரமேஷ் குடும்பத்தினர் நேரில் சென்று முக்கியஸ்தர்களிடம் முறையிட்டும் வரிவசூல் செய்யப்படவில்லை. இதனையடுத்து ரமேஷ் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் டிஎஸ்பி தலைமையில் ஊர் முக்கியஸ்தர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியில் முடிவடைந்தது.
தற்போது நடைபெற்று வரும் மாசி விழாவிற்கு ரமேஷிடமிருந்து குடிபாட்டு வரி வாங்க முக்கியஸ்தர்கள் மறுத்துவிட்டனர்.இந்த சூழலில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஊர் முக்கியஸ்தர்கள் சின்னச்சாமி, மாயவன், உள்ளிட்ட 9 பேர் மீது குடிமையியல் உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து நம்மிடம் பேசிய ரமேஷ், 120 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் எனது தம்பி காதலித்து திருமணம் செய்துகொண்டான் என்ற ஒரே காரணத்தினால் கோவில் விழாவில் பங்கேற்க எங்களை அனுமதிக்கவில்லை.