திருச்சி :தமிழ்நாட்டில் 7ஆவது ரோஸ்கார் மேளா வேலை வாய்ப்புப் பணி ஆணை வழங்கும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (ஜூலை 22) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக பேசினார். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 109 பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், “பாரத பிரதமர் நரேந்திர மோடி மிக உயரிய நோக்கமும், முயற்சியும் இந்த நாட்டில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பது தான். புதுப்புது தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அதை மக்களுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது பிரதமரின் எண்ணமாக இருந்து கொண்டிருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக நமது நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சியான நாடாக முன்னேறி கொண்டிருக்கிறது. இந்தாண்டு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்து 76 ஆம் ஆண்டு அடி எடுத்து வைக்கிறது.
நம்முடைய இலக்கு அடுத்த 25 ஆண்டுகளில் 100ஆவது சுதந்திர தினத்தில் நாடு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் விதமாக ஸ்டார்ட் அப் இந்தியா என பல திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பாக 500 கம்பெனிகள் தான் இருந்தது. இந்த 9 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சம் கம்பெனிகள் வளர்ந்துள்ளது. உலகத்தில் மிகப்பெரிய 3வது இடத்தில் இருக்கிறது இந்தியா. இதற்குக் காரணம் பாரத பிரதமர் மோடி தான்.
உலகத்திலேயே மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்ற பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது. இங்கிலாந்தை பின் தள்ளிவிட்டு மிகவும் வேகமாக வளர்ந்த வருகின்ற 5ஆவது நாடாக நம்முடைய பாரத நாடு இருக்கிறது. இது கடந்த 9 ஆண்டுகளில் வளர்ந்துள்ளது. ஒரு ஆண்டுக்குள் 10 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டு வருகிறது. 6 மாதத்தில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில் மிக வேகமாக இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 2022 ஆம் தேதி முதல் வேலை வாய்ப்பு முகமை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அடுத்த 25 ஆண்டுகளில் இந்த தேசத்தை வழி நடத்துகின்ற நாடாக நாம் இருக்கின்றோம். கர்மயோகி பிரபா மூலமாக கிட்டத்தட்ட 400 புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாரத பிரதமர் நல்ல சிறந்த ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார் டிஜிட்டல் பேமெண்ட், தேவையற்ற சட்டங்கள் இருந்தது அந்த சட்டங்களை எல்லாம் நீக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாட்டின் வளர்ச்சிக்கு, வேகத்திற்கு தடையாக இருக்கக் கூடாது.
அந்த தடை கற்களை அகற்றிவிட்டு ஒரு நல்ல ஆட்சி பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். சேவை, நல்ல அரசாங்கத்தை கொடுக்க வேண்டும், ஏழை எளிய மக்களின் நலனுக்கான மேம்பாடு இந்த மூன்று தாரக மந்திரத்தை மோடி அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்.