திருச்சி: லால்குடி அருகே அமைந்துள்ளது கீழரசூர் ஊராட்சி. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்துவது வழக்கம். அதே போல நடப்பாண்டிலும் ஜல்லிக்கட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஞாயிரன்று முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் ஊரடங்கின்போது கீழரசூர் ஊராட்சியில் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுவதாக கல்லக்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், தடியடி நடத்தி ஜல்லிக்கட்டு விழாவை தடுத்து நிறுத்தினர்.
அப்போது தடியடி நடத்திய காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் மீது அப்பகுதி மக்கள் கற்களால் தாக்கியதில் அவர் தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட சக காவலர்கள், லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் இளங்கோவன் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.