தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து இலங்கைத் தமிழர்கள் 7 பேர் விடுதலை! - திருச்சி முகாமில் இலங்கை தமிழர்கள் 7 பேர் விடுதலை

திருச்சி சிறப்பு முகாமில், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Srilankan
திருச்சி

By

Published : Apr 5, 2023, 3:54 PM IST

திருச்சி: தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். அதன்படி, இலங்கைத் தமிழர்கள் 104 பேர்- நைஜீரியா, பல்கேரியா, வங்கதேசம், இந்தோனேசியா உள்ளிட்ட பிற வெளிநாட்டினர் என மொத்தம் 117 பேர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்றது, போலி கடவுச்சீட்டு முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் உள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்படும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். சிறப்பு முகாமிற்குள் சமைத்துச் சாப்பிடவும், செல்போன் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு தினசரி உணவுப் படியும் வழங்கப்படுகிறது. இதில் இலங்கைத் தமிழர்கள் பலர், தங்களை விடுதலை செய்து, தாயகம் அனுப்பி வைக்கக்கோரி அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி போன்ற போராட்டங்களையும் நடத்தினர்.

இந்த நிலையில், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து இன்று(ஏப்.5) ஏழு இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சிறப்பு முகாம் வாசிகளில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜன் (40), பொள்ளாச்சியைச் சேர்ந்த பார்த்திபன் (32), விருதுநகரை சேர்ந்த விஜயகுமார் (40), கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கனகசபை, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிஹரன் (28), சசிஹரன் (30), ஏசுதாஸன் (26) ஆகிய ஏழு பேருக்கு விடுதலையாவதற்கான உத்தரவு ஆவணங்கள் வந்து சேர்ந்ததால், விடுவிக்கப்பட்டனர். கே.கே.நகர் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான காவலர்கள், சிறப்பு முகாமிலிருந்து ஏழு பேரையும், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, "திருச்சியில் உள்ளது இலங்கைத் தமிழர்களுக்கான சிறப்பு முகாம் அல்ல. குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டு, பிணையில் இருக்கும் வெளிநாட்டினரை தங்க வைத்துள்ள முகாம். இதில், இலங்கை மட்டுமின்றி பிற நாட்டினரும் உள்ளனர். பிணையில் வெளிவரும் வெளிநாட்டினர் தப்பிச்சென்று விடுவதால், இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிறப்பு முகாமில் உள்ளவர்கள் தவறான தகவல்களை சொல்கிறார்கள். யாரையும் பொய் வழக்கில் கைது செய்யவில்லை. ஒரு வழக்கு முடிந்திருந்தாலும் வேறு வழக்கு முடியாமல் இருக்கும். ஆகையால் அவர்கள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். வழக்கு முடிந்தால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு, விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்" என்றனர்.

இதையும் படிங்க: கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கைகளால் வடைகளை எடுத்து வழிபாடு

ABOUT THE AUTHOR

...view details