திருச்சி:திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்குத் தினசரி விமானச் சேவை இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அதிகாரிகள் பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக புதிய முனையம், கட்டுமான பணி உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து அதிக அளவில் வெளிநாடுகளுக்கு வெளிநாட்டு பணங்கள், தங்கம் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவதும் வெளிநாடுகளுக்குக் குருவிகளாகச் செல்பவர்கள் அதிக அளவில் தங்கத்தைக் கடத்தி வருவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிக அளவில் முனைப்புடன் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று (ஜூன் 22) திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இரண்டு பயணிகளின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனையில், உடைமைகள் வைக்கும் 3 பெட்டிகளில் மறைத்துக் கடத்தி வரப்பட்ட 6850 உயிர் ஆமைக்குஞ்சுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த ஆமைக்குஞ்சுகள் தென் கிழக்கு ஆசியா நாடுகளில் காணப்படும் அரிய வகையான சிகப்பு காதினை கொண்டவை. இவ்வாறு சட்ட விரோதமாகக் கடத்திவரப்பட்ட ஆமைக்குஞ்சுகள் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.