திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் குடும்பத்துடன் தங்கி அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில், கடந்த மாதம் கரோனா சிறப்பு வார்டு பகுதியில் பணியில் இருந்ததால் 15 நாள்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் மணப்பாறை விராலிமலை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது மாமியாரை (79) காண அவ்வப்போது வந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து, 15 நாள் விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிய அப்பெண் செவிலியருக்கு கரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு கரோனா நோய் தொற்று உறுதியானது. இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மாமியாரைப் பார்க்க மணப்பாறைக்குச் சென்று வந்ததாகக் கூறியதையடுத்து மணப்பாறையில் உள்ள அவரது உறவினர்கள் 14 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் மூதாட்டி உள்பட குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவர் சந்தோஷ் தலைமையிலான சுகாதாரக் குழு அப்பகுதியில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த கரோனா தொற்று அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.