திருச்சி:திருச்சி மற்றும் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போதைப் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சட்ட விரோதமாக விற்பனை செய்தால் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி சோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி அரியமங்கலம் பகுதியில் கலப்பட தேயிலை விற்பனை செய்வதாக பொதுமக்களிடம் இருந்து உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபுக்கு தொடர்ந்து ரகசிய புகார் வந்து கொண்டிருந்தது. புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் திருமகள் தெரு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
தாவீது என்பவரது மகன் செல்வினுக்குச் சொந்தமான குடோனில் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு செல்வராஜ், வசந்தன்,பொன்ராஜ், இப்ராஹிம் மற்றும் ஜஸ்டின் ஆகியோர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு விற்பனைக்காக சுமார் 550 கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். தேயிலை பாக்கெட்டுகளை பிரித்து ஆய்வு செய்ததில் அவைகள் கலப்பட தேயிலை என தெரிய வந்தது. மேலும், கலப்படத்துக்கு பயன்படுத்திய பாக்கெட்டுகள் மற்றும் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.