திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி ஆலயம் பஞ்சபூத தலங்களில் நீர் தலமாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. இங்கு அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயம் எதிர்புறம் முள்புதர் அடங்கிய பகுதி உள்ளது. இந்தப் பகுதியை நந்தவனமாக மாற்ற திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் அந்தப் பகுதியில் ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணி இன்று நடைபெற்றது. அப்போது பித்தளைக் கலயம் ஒன்று மூடிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்த இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் விரைந்துசென்று அந்தக் கலயத்தைக் கைப்பற்றி திறந்து பார்த்தனர்.
அப்போது அதில் பழங்கால தங்க காசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவற்றை எண்ணும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 505 தங்க நாணயங்கள் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை மொத்தம் ஆயிரத்து 716 கிராம் எடை கொண்டதாகும்.