திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள பெல் நிறுவனம் மகாரத்னா என்று அழைக்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தில், சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்கள் தங்களுக்கு வரும் ஊதியத் தொகையை எளிதாக பெறவும், பணமும் தேவைப்படும் போது நகைகடன் பெறும் வகையிலும் பாரத மிகுமின் ஊழியர்கள் வங்கி அலுவலகம் பெல் நிறுவன வளாகத்தில் பெல் டவுன்ஷிப் கைலாசபுத்தில் தலைமை அலுவலகமும், பெல் நிர்வாக அலுவலகம் (24 பில்டிங்) கிளை அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி பெல் நிர்வாக அலுவலக வளாகத்தில் செயல்பட்ட பெல் ஊழியர்கள் கூட்டுறவு வங்கியில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்வதற்காக கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 43 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பெல் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இருப்பினும் விசாரணையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
வங்கியின் லாக்கர் வசதியை பெல் ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி பெல் குடியிருப்பு பி3 செக்டாரைச் சேர்ந்த மறைந்த பெல் ஊழியர் சேகரின் மகன் திலக்(22) வங்கியில் லாக்கர் வாங்கி, அதில் தனக்கு சொந்தமான 35 சவரன் தங்க நகையை வைத்து விட்டுச் சென்றுள்ளார்.