திருச்சி: திருச்சிசர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குத் தினசரி விமானச் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி கொண்டே வருகிறது. திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் வந்தது.
விமானத்தில் வந்த பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விமானத்திலிருந்து வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் ஆண் பயணி நூதன முறையில் கிரைண்டர் மிஷினில் (hand mixer) மறைத்து வைத்துக் கடத்தி வரப்பட்ட ரூபாய் 21 லட்சத்து 27 ஆயிரத்து 672 மதிப்பு உள்ள 348 கிராம் எடை மதிப்புள்ள கடத்தல் தங்கம் சிக்கியது. தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல் விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 586 மதிப்பு உள்ள 49 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்து அதைக் கழிவறையில் வீசி சென்ற நபர் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.