திருச்சி: முசிறி அருகே தொட்டியம், பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த அரசு மேல்நிலைபள்ளியில் தொட்டியம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் படித்து வருகின்றனர். தொட்டியம் தோளூர் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்துவரும் கோபி என்பவரது மகன் மவுலிஸ்வரன், அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் படித்துள்ளனர். அப்பொழுது சக மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கி போட்டு விளையாடியதாக தெரிகிறது. இதில் சக மாணவர்கள் மவுலீஸ்வரன் கற்களை தூக்கி வீசியதாக தவறாக எண்ணி கொண்டு மாணவன் மவுலீஸ்வரனை 3 மாணவர்கள் சேர்ந்து கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் மாணவன் மவுலீஸ்வரன் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் உள்ள தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மவுலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மவுலீஸ்வரனின் பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு தொட்டியம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.