திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதியில் வனத்துறை சார்பில் சந்தன மரங்கள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த சந்தன மரங்களை மர்ம கும்பல் திருட்டுத்தனமாக வெட்டி கடத்திச் சென்று விற்பனை செய்வதாக மாவட்ட வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி வனச்சரகா் குணசேகரன் தலைமையில் வனவர் மதன்ராஜ், வனக்காப்பாளர் சரவணன், சுரேஷ், வனக்காவலா் குணசேகரன் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஶ்ரீரங்கம், மேலூா் வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதியில் சந்தன மரங்களை திருட்டுத்தமாக வெட்டிய கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஶ்ரீரங்கத்தை சேர்ந்த செந்தில் குமாா் (40), மேலூரை சேர்ந்த சின்னராஜா (31) என்பது தெரியவந்தது. திருடிய சந்தனமர கட்டைகளை இவர்களிடமிருந்து வாங்கிய ஸ்ரீரங்கம் சந்தனம் மில் அதிபர் வெங்கடேச பாபு என்பவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மூன்று பேருக்கும் ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சபரிமலை விமான நிலையம்: தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்த பினராயி விஜயன்