திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மாதுளாம்பிகை ஸ்ரீ நாகநாத சுவாமி ஆலயம் உள்ளது.
இக்கோயிலில் இன்று மீனாட்சித் திருக்கல்யாணம் நடைபெற்றது. நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க, மங்கள இசையுடன் கல்யாண சீர் பொருட்கள் ஆலயம் முழுவதும் வலம் வந்து மூலவர் சன்னதிக்கு பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.
அங்கு முதல் கடவுள் கணபதிக்கும், தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கும் ஆராதனைகள் முடிந்து மூலவர் ஸ்ரீ நாகநாத சுவாமி திருமுகம் காட்டுதல் நடைபெற்றது.
ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில் திருக்கல்யாண வைபவம் அதனைத் தொடர்ந்து மீனாட்சி அலங்காரத்தில் வீற்றிருந்த அருள்மிகு மாதுளாம்பிகைக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் என்னும் மங்கள நாண் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. கல்யாணம் முடிந்து சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள நாண், மஞ்சள், குங்குமம், வளையல், பூ, தாம்பூலம் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.