கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளிலிருந்து 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் மட்டுமே சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் திருச்சியிலும் துபாய், சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர உள்ளூர் விமானங்கள் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.
தற்போது வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
aந்த வகையில் தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால், மேலும் தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்ற ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் மத்திய புலனாய்வு பிரிவு அலுவலர்கள், தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று (நவ. 1) இரவு திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய புலனாய்வு பிரிவு அலுவலர்கள் தலைமையில், மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பயணிகள், அவர்களது உடமைகளை சோதனையிட்டபோது, திருச்சியைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் உள்பட மூன்று பயணிகள் கொண்டு வந்த உடமைகளில் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து மொத்தம் 2.5கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, மூன்று பேரிடமும் அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.