திருச்சி:தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் (என்ஐடி) 19வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநர் அகிலா கூறுகையில், ''அகில இந்திய அளவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகங்களில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் நடக்கும் 19வது பட்டமளிப்பு விழாவில் இளநிலை, முதுநிலை கட்டடக்கலை, ஆராய்ச்சிதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2155 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இது அதிகமாகும்.
இவற்றில் 1090 மாணவர்கள் தொழில்நுட்பத்திலும், 44 மாணவர்கள் கட்டடக்கலையிலும் இளங்கலைப் பட்டம் பெறுகின்றனர். மேலும் முதுகலை மாணவர்களில் 538 பேர் தொழில் நுட்பத்திலும், 22 பேர் கட்டடக்கலையிலும், 89 பேர் அறிவியலிலும், 108 பேர் கணிப்பொறி பயன்பாடுகளிலும், 19 பேர் கலையிலும், 92 பேர் வணிக மேலாண்மையிலும், 19 பேர் அறிவியல் ஆய்விலும் பட்டம் பெறுகின்றனர்.
இன்னும் 142 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகின்றனர். முதன்மை மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு வழங்கப்படும் ஜனாதிபதியின் சிறப்புப் பதக்கத்தை மின் பொறியியல் மற்றும் மின்னணுவியல் துறையின் சௌந்தர்யா என்ற மாணவி பெறுகிறார்.