திருச்சி: மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (செப். 18) முதல் அக்டோபர் 1 ஆம் தேதி முடிய சிறப்பாக நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பெரிய கொழுக்கட்டையானது நிவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
இந்த மெகா சைஸ் கொழுக்கட்டையானது தோளில் சுமந்து வந்து படையிலிடப்படுகிறது. அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடுகிறது. இதர்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில், இன்று (செப் 18) காலை மாணிக்க விநாயகர் சன்னதியில் 75 கிலோ மற்றும் உச்சி விநாயகர் சன்னதியில் 75 கிலோ என மொத்தமாக 150 கிலோ எடையில் பிரம்மாண்டமான கொழுக்கட்டை நிவேத்தியம் செய்யப்பட்டது.
மேலும் இந்த கொழுக்கட்டை பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய மூலப் பொருட்களைக் கொண்டு திருக்கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது. மேலும், 2004 ஆம் ஆண்டு முதல் பெரிய கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.
இன்று (செப் 18) தொடங்கி 14 தினங்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். மேலும், மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.