திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தாதம்பட்டியைச் சேர்ந்தவர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன். இவர், கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நண்பகல் அதேப்பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், சிறுமியின் வீட்டில் பெற்றோர் இல்லாததை அறிந்த சிறுவன், சிறுமிக்கு மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி பக்கத்திலிருந்த கல்லறைப் பகுதியில் உள்ள முட்புதர் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்று, சிறுமியின் உடைகளை களைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் தோட்டத்து வேலையில் ஈடுபட்டு வந்த சிலர், அங்கு வருவதைக் கண்ட சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவத்தை நேரில் கண்ட சிலர், இது குறித்து சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் கேட்டபோது; சிறுவன் நடந்து கொண்டது உண்மை தான் என்றும்; இதுபற்றி வீட்டில் யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டியதால், யாரிடமும் கூறாமல் மறைத்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் விசாரித்து, திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.