100 நாள் வேலையில் முறைகேடு - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை - திருச்சி செய்திகள்
திருச்சி: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர்களுக்கு முறையாக வேலை வழங்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
![100 நாள் வேலையில் முறைகேடு - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:12:49:1597308169-tn-tri-01-public-protest-issue-visual-image-script-tn10020-13082020140018-1308f-01088-380.jpg)
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள முகவனூர் ஊராட்சி பொதுமக்கள், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு முறையாக வேலை வழங்கவில்லை எனக் கூறி இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் சண்முகம் தலைமையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சுமார் 250க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பொதுமக்களிடம் மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், முறையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பதாக தெரிவித்தார்.
ஆனால் அலுவலகத்தின் வெளியில் இருந்த பொது மக்கள் இதனை ஏற்க மறுத்து கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேல் முறையாக வேலை வழங்காத ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? வையம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட பஞ்சாயத்துக்களில் நடக்கும் 100 நாள் வேலை முறைகேடுகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது அரசியல் தலையீடு காரணத்தினால் தானா? என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சுமார் அரை மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு இன்னும் ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அலுவலர் உறுதி கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.