ஈரோடு மாவட்டம் சென்னிமலையிலுள்ள விவசாய நிலப் பகுதி கீழ்பவானி பாசனத்தை நம்பியுள்ளது. சென்னிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள கீழ்பவானி கால்வாய்கள் தூர்வாரப்படாமல் சுத்தமற்ற நிலையில் இருப்பதாகவும், தண்ணீர் திறந்து விடப்படுவதற்குள் கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்திட வேண்டும் என விவசாயிகள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
கால்வாயைத் தூர்வாராமல் போனால் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதி வரை வர முடியாத சூழ்நிலை ஏற்படலாம் என விவசாயிகள் அச்சம் கொண்டனர். எனவே, மாவட்ட நிர்வாகம் கால்வாயைத் தூர்வாரும் பணியில் ஈடுபட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் இன்னொரு பக்கம் தற்போது கேரள மாநிலம் மற்றும் நீலகிரி பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், முழுக் கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த வாரம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பாசன கால்வாயின் முதல் போகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அணையில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கால்வாயை வந்து சேர்வதற்குள் தூர் வார வேண்டும் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் விவசாயிகளுடன் இணைந்துள்ளனர். இன்று (ஆகஸ்ட் 16) காலை முதல் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணியில் கால்வாயில் நிரம்பியிருந்த மதுப்பாட்டில்கள், பாலிதீன் குப்பைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.
கண்டுகொள்ளாத அரசு - களமிறங்கிய இளைஞர்கள்! கால்வாயை தூர் வார நகராட்சி நிர்வாகத்தினர் முன்வராத நிலையில், பொதுமக்கள் தாமாக வந்து கால்வாயை தூர் வாரி சுத்தம் செய்து கொண்டது அப்பகுதி விவசாயிகளிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.