ஈரோடு மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணி மாறுதல் நடைமுறைகளுக்காக நடத்தப்படும் பொதுக்கலந்தாய்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, அலுவலர்களின் தொடர் அழுத்தம் காரணமாக பொதுக்கலந்தாய்வு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், பணி மாறுதலுக்கான பொதுக்கலந்தாய்வு இதுவரை நடத்தப்படவில்லை என அறியமுடிகிறது.
இந்நிலையில், இதனைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இரவிலும் தொடரும் இந்த காத்திருப்புப் போராட்டத்தில் தமிழ்நாடு கிராம அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டம் காரணமாக வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொண்டு பணிகள் பாதிப்பைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.