சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் 'வெற்றிவேல் யாத்திரை' அறிவிப்பு மற்றும் முத்திரையை அறிமுக நிகழ்வு வெள்ளிக்கிழமை (அக்.9) நடைபெற்றது.
அதில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், செய்தியாளர்களை சந்தித்த பேசியபோது, "மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தமிழர்கள் மத்தியில் எடுத்துரைக்க வெற்றிவேல் யாத்திரை எனும் பரப்புரை பயணத்தை தமிழ்நாடு பாஜக முன்னெடுக்கவுள்ளது.
நவம்பர் மாதம் 6ஆம் தேதி திருத்தணியில் தொடங்கி இந்த யாத்திரை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திருச்செந்தூரில் நிறைவடையும்.
வருகின்ற 2021 ஆம் தேர்தலில் பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெறச் செய்ய இந்த யாத்திரை மிக முக்கிய பங்கு வகிக்கும்.
புதிய கல்விக் கொள்கை, வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து மக்கள் மத்தியில் இந்த யாத்திரை மூலமாக எடுத்து உரைக்க இருக்கிறோம்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழர் கடவுளான கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் விதமாக காணொலி வெளியிட்ட கறுப்பர் கூட்டத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.
குறிப்பாக, கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வேல் பூஜையில் மட்டும் 65 லட்சம் குடும்பங்கள் பங்கேற்றன.
கறுப்பர் கூட்டத்தின் மீது தமிழ்நாடு அரசு இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை கறுப்பர் கூட்டத்தை ஏன் கண்டிக்கவில்லை?