மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி கிசான் என்ற பெயரில் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ஆண்டொன்றுக்கு ரூ.6000/- வீதம் 3 தவணைகளாக வழங்கும் வகையில் சிறப்பு திட்டத்தை அறிவித்தது.
தமிழ்நாட்டில் மொத்தம் 1.25 கோடி குடும்பங்கள் விவசாயப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண் துறை மூலமாக முதற்கட்டமாக 25 லட்சம் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நிதி வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது.
மாநில அரசுகள் இதன் மூலமாக செல்வாக்கு அடைவதாக நினைத்த மத்திய அரசு, தாங்கள் தான் இதற்கு நிதி கொடுக்கிறோம் என்பதை விவசாயிகளுக்கு உணர்த்தும் வகையில் தங்கள் மூலமாக வழங்க நேரடியாக இணையத் தளம் வழியே பதிவு செய்து கொள்ள அனுமதி வழங்கியது.
மத்திய அரசின் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வேளாண் உதவி அலுவலர்கள் மற்றும் இடைத்தரகர்கள், துணையோடு விவசாயி என்ற பெயரில் போலி நபர்களின் பெயர்களைப் பதிவேற்றம் செய்தனர். இந்த முறைகேடு விளைவாக 40 லட்சம் பயனாளிகளின் எண்ணிக்கை உயர்ந்தது.
மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதிகள் மூலம் அறிவிக்கப்படும் திட்டங்கள் கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மாநில அரசுகள்தான் நேரடியாக மக்களுக்கு கொண்டு செல்வதே இதுவே நடைமுறையாக இருந்த நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசு எடுத்த முயற்சி மிகப்பெரும் ஊழலாக மாறிவிட்டது. இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.