மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வீடுகள்தோறும் மத்திய அரசின் ஜல சக்தி அபியான் திட்டத்தின்படி ரூ. 89 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (செப்டம்பர் 5) தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "பிரதமர் மோடி கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் தொடங்கி வைத்த 'Jal jeevan mission' என்ற திட்டத்தின் மூலம், கிராமப்புறங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2024ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பிற்கு இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டமானது மத்திய அரசு 50 விழுக்காடும், மாநில அரசு 50 விழுக்காடும் சேர்ந்து சரிசமமாக நிதி பங்கு அளித்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழே குடிநீர் ஆதாரங்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் குழாய் அமைக்கும் பணியை ஊரக வளர்ச்சிதுறை செயல்படுத்தி வருகிறது.
மதுரை மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 420 ஊராட்சிகளில் 1946 உட்கடை கிராமங்களில் உள்ள ஏறத்தாழ 5,00,000 வீடுகளுக்கு 2024ஆம் ஆண்டிற்குள் குடிநீர் வழங்குதை இலக்காக கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2020-21ஆம் ஆண்டிற்கு 1,55,231 வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் விதமாக 97, 959 இணைப்புகள் வழங்கிட ரூ. 89 லட்சம் செலவில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.
அதைத் தொடர்ந்து இந்த திட்டம் முழுவதும் இலவசமா..? என்று செய்தியாளர்களின் கேள்விக்கு, இத்திட்டத்தின் சாராம்சம் தெரியாமல் சற்று தடுமாறிய அமைச்சர், மதுரை மாவட்ட ஆட்சியர் வினயிடம் கேட்டபோது அவருக்கும் தெரியாததையடுத்து சலசலப்பு ஏற்பட்டது.
நிலைமையை கண்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இந்துமதி தலையிட்டு, "இந்த குடிநீர் குழாய் இணைப்பான திட்டம் இலவச இணைப்பாக செயல்படுகிறது. பயனாளிகள் விருப்பத்தின் பேரில் அவரவர் வீடுகளில் இணைக்கும் குழாய்க்கு 10 விழுக்காடு உடலுழைப்பை தரலாம்" என்று பதில் வழங்கி நிலைமையை சாதுர்யமாக கையாண்டார்.
மத்திய அரசின் ஜல சக்தி அபியான் திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் மற்றும் ஆட்சியருக்கு திட்டத்தின் சாராம்சம் தெரியாமலேயே பங்கேற்றதால் அலுவலர்கள், கிராம மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.