தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரள அரசின் உதவியை மறுக்கவில்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை: கேரள அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முன்வந்ததை தமிழ்நாடு அரசு மறுத்ததாக வந்த செய்தி உண்மையில்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

velumani

By

Published : Jun 20, 2019, 10:50 PM IST

தமிழ்நாட்டில் தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதை சரிசெய்வதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்குவதாக முன்வந்தும் அதை தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து கேரள முதலமைச்சரின் இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், தமிழ்நாடு அரசு கேரள அரசுடன் இணைந்து மக்களின் தண்ணீர் பிரச்னையை போக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ரயில்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அளிப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாளரிடம் பேசினார். ஆனால் முதலமைச்சர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்றிருந்ததால், அவரிடம் கலந்து ஆலோசித்த பின் தெரிவிப்பதாக பதில் அளிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும், கேரள அரச உதவ முன்வந்ததற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் வேலுமணி, ஒரு முறை மட்டும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்காமல் தினந்தோறும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கினால் உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இறுதியாக அவர் தமிழ்நாடு அரசு கேரள அரசின் உதவியை மறுத்ததாக வந்த செய்தி உண்மையில்லை என்றும் மறுத்துள்ளார்.

தண்ணீர் பிரச்னை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், முதலமைச்சருக்கு உடல் நலம் குன்றியதால் அந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறாமல் இருந்துவருகிறது. இந்நிலையில் இந்த கூட்டம் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details