இது தொடர்பாக அவர் இன்று (செப்டம்பர் 4) வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில், " ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற தத்துவஞானியும், அறிஞரும், கல்வியாளருமான முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கல்வி ஒருவரை முழுமையான மனிதனாகவும், புனிதமான ஆன்மாவாகவும் மாற்றுவதோடு மட்டுமல்லாமல் பிரபஞ்சத்திற்கு வழங்கிடும் இனிய கொடையாக இருக்கின்றது. உலகளாவிய சகோதரத்துவம் என்பது நடைமுறை வாழ்வில் கல்விக்கான சிறந்த பாதுகாப்பு அரணாகத் திகழ்கின்றது. உண்மையான கல்வி ஒரு மனிதனின் தகுதியையும் சுயமரியாதையையும் மேம்படையச் செய்கின்றது. இதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
ஆசிரியர்கள் அறிவாற்றல் படைத்த சிறந்த மனிதர்களாகவும், கற்பிப்பதை நேசிப்பவர்களாகவும் இருத்தல் மிகமிக அவசியமானதாகும். இந்த இரு பண்புகளும் கல்வியின் தரத்தை மேம்படுத்தும்.
நல்ல ஆசிரியர்களால், சிறந்த ஒழுக்கம் கொண்ட, கைதேர்ந்த திறமையுடைய, அறிவாற்றல் பெற்ற மனிதர்களை உருவாக்கித்தர முடியும். ஆசிரியர்கள், மாணவர்களின் கனவுகளை நினைவாக்கிட, அவர்களுக்குள் பொதிந்திருக்கும் சிந்தனைத் திறனை ஊக்குவித்து, அறிவாற்றலை மேம்படையச் செய்திட முடியும் என்று நம்புகின்றேன்.