சென்னை - தியாகராயர் நகர், மூசா தெருவில் ராஜேந்திரகுமார் என்பவருக்குச் சொந்தமாக உத்தம் ஜூவல்லர் எனும் மொத்த வியாபார நகைக்கடை உள்ளது.
இந்நிலையில், அந்த தங்க நகைக்கடையில் கடந்த 21ஆம் தேதி அதிகாலையில் ஏறத்தாழ ரூ.2.5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையர்கள், திருடிச் சென்றதாக அறிய முடிகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில், தியாகராய நகர் துணை ஆணையர் ஹரிகரன் மேற்பார்வையில் மாம்பலம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்ததில் இருவருடைய அடையாளம் கண்டறியப்பட்டது. அவர்களில் ஒருவர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மார்க்கெட் சுரேஷ் என்பதும்; மற்றொருவர் அவரது கூட்டாளி அப்புனு வெங்கடேசன் என்பதும் தெரியவந்தது.
இதனிடையே, தலைமறைவான அவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர்.
தேடுதல் நடவடிக்கையின் விளைவாக கொள்ளையன் மார்க்கெட் சுரேஷ், அவரது தோழி கங்கா தேவி ஆகியோரின் கைது திருவள்ளூரிலும், அப்புனு என்பவரின் கைது செய்யாறிலும் நிகழ்ந்தது.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பல்வேறு நபர்களுக்கு பங்கு பிரித்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
குறிப்பாக, அந்த விசாரணையில், திருவள்ளூரில் உள்ள வழக்குரைஞர் முத்துக்குமார் என்பவரிடம், கொள்ளையடிக்கப்பட்ட நகையில் இருந்து அரை கிலோ தங்க நகையை கொடுத்திருந்தது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து, வழக்குரைஞர் முத்துக்குமாரை தனிப்படை காவல் துறையினர் பிடித்து விசாரித்தபோது மார்க்கெட் சுரேஷ் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டால், பிணையில் வெளியே எடுக்க முன்பணமாக அரை கிலோ தங்கத்தை கொடுத்து சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வழக்குரைஞர் முத்துக்குமாரிடமிருந்து அரை கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை எழுதி வாங்கிவிட்டு, பின்னர் அவரை அனுப்பி வைத்தனர்.
இதுவரை தியாகராயநகர் கொள்ளை வழக்கில் 1 கிலோ 150 கிராம் தங்க நகைகளும், 7 கிலோ வெள்ளி நகைகளையும் காவல் துறையினர் மீட்டுள்ளனர். மேலும், மீதமுள்ள தங்க நகைகளை மீட்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.