சென்னை புழல் பகுதியில் உள்ள விநாயகபுரம் பால விநாயகர் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் கூலி தொழிலாளியான சீனிவாசன், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக, வேலைவாய்ப்பு இல்லாத அவர் கடந்த நான்கு மாதங்களாக வீட்டு வாடகை தரவில்லை என அறியமுடிகிறது.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரன் அதுகுறித்து சீனிவாசமிடம் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் பென்ஷாமிடம், வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சீனிவாசன் கடந்த நான்கு மாதமாக வீட்டு வாடகை தரவில்லை என்றும், வீட்டை காலி செய்ய மறுப்பதாக, வாடகை கேட்கும் நேரங்களில் மது அருந்திவிட்டு தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரையடுத்து, ஜூலை 1ஆம் தேதியன்று புழல் காவல் நிலைய ஆய்வாளர் பென்ஷாமின் தலைமையிலான காவலர்கள், சீனிவாசன் வீட்டிற்கு சென்று அவரை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு வரச்சொல்லியுள்ளனர். காவல்துறை சென்ற சிறிது நேரத்தில் சீனிவாசன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார்.
உடல் முழுவதும் எரிந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 86 விழுக்காடு தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சீனிவாசன் சிகிச்சை பலனின்றி, ஆகஸ்ட் 2ஆம் தேதி மதியம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
மருத்துவமனையில் சீனிவாசனைப் பார்க்க வந்த அவரது சகோதரரிடம், புழல் காவல் ஆய்வாளர் பென்ஷாம் மற்றும் வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரன் ஆகியோர் தன்னை தாக்கியதாக வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். இதனை அவரது சகோதரர் தன்னுடைய கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். வாடகை தகராறில் தலையிட்டு சீனிவாசனின் தற்கொலைக்கு காரணமான ஆய்வாளர் பென்ஷாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அந்த வழக்கில் சென்னை காவல் ஆணையருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "வீட்டு வாடகை தொடர்பான சிவில் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஏன் தலையிட்டார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என, 4 வாரத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.