இது தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேசிய புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலர் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறைச் செயலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களிடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாகக் கருத்துக் கூறலாம் என கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை 2020 என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசிய பிரச்னையாகும். அத்தகைய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாமல், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு நடைமுறைக்குக் கொண்டு வந்திருப்பது என்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும்.
அது மட்டுமல்ல, இந்தியா என்பது பல்வேறு மொழிவாரி மாநிலங்களின் கூட்டமைப்பாகும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மாநிலங்களின் பங்கு மிக முக்கியமானதாகும். கல்வி என்ற துறை மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுவாக இருக்கும் பொதுப்பட்டியலில் உள்ளது. இத்தகைய சூழலில் மாநில அரசுகளின் கருத்துக்களைக் கூட எதிர்பார்க்காமல் மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களிடம் நேரடியாக மத்திய அரசு கருத்துக் கேட்பது என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும்.