தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மாவுப் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கப்படும்' - ககன்தீப் சிங் பேடி

நாமக்கல்: மாவுப் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கப்படும் என்று வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்
முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்

By

Published : Jun 3, 2020, 9:17 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் 17 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்படுள்ளது. இதில் 263 ஹெக்டேர் பரப்பளவில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த விவசாயிகளின் மத்தியில் எழுந்த கோரிக்கையையடுத்து, பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 54 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் அரியாகவுண்டன்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி பயிரில் ஏற்பட்டுள்ள, மாவுப் பூச்சி தாக்குதல் பாதிப்புகளை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மாவுப் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன் அவர் கலந்தாலோசித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ககன்தீப் சிங் பேடி, "தமிழகம் முழுவதும் 71 ஆயிரம் ஹெக்டேர் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு மரவள்ளியில் மாவுப் பூச்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தாக்குதலைக் கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மரவள்ளி விவசாயிகளுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். வடமாநிலங்களில் வெட்டுக்கிளி பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெட்டுக்கிளி பரவல் கிழக்கு நோக்கி இருப்பதால் தெற்கே உள்ள தமிழ்நாட்டிற்கு அவை வர வாய்ப்பில்லை.

டெல்டா பாசன பகுதிகளில் 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாசன வாய்க்கால்களில், கனரக இயந்திரங்களைக் கொண்டு முழுவீச்சில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறுவை சாகுபடிக்காக ஒன்றரை லட்சம் டன் உரம் இருப்பில் உள்ளது.

அதேபோல், போதிய அளவு கோ 51 ரக நெல் விதைகளும், புதிய ரக நெல் விதைகளும் இருப்பில் உள்ளது. குறுவை சாகுபடிக்குத் தேவையான உழவு இயந்திரங்களும் அரசு சார்பில் போதிய அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details