இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு - 24 மணிநேரமும் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. மக்களின் நல்வாழ்வு- பொருளாதார வளர்ச்சிப் பற்றியல்ல.
மதச்சார்பின்மையை எந்தெந்த வகைகளில் எல்லாம் ஒழிக்கலாம் - சமூகநீதியில், இட ஒதுக்கீட்டில் எப்படி எப்படியெல்லாம் எந்தெந்த வகைகளில் எல்லாம் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டி - உயர்சாதியினருக்கு ஒட்டுமொத்தமாகக் கொண்டு சேர்க்கலாம் என்பதில் ஒரு தனிக் குழுவே முழு வீச்சில் செயல்படுவதாகவே தெரிகிறது.
மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நீதிமன்றம் சொல்லியும் - 50 விழுக்காடு இடங்களைக் கொடுக்க முடியாது என்று சொல்லுகிறது மத்திய பாஜக அரசு. இன்னொரு பக்கத்தில் உயர்சாதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு பந்தயக் குதிரைப் பாய்ச்சல் வேகத்தில் அவசரமாக சட்டம் இயற்றிச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்ததைப் புரிந்துகொண்டால் - இன்றைய மத்திய பாஜக அரசு பச்சையாகப் உயர் சாதிகளுக்கான அரசு என்பது பட்டவர்த்தனமாகவே பளிச்சென்று தெரியவரும்.
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் ‘நீட்’ மூலம் தேர்வு என்ற ஒன்றினைத் திணித்தது.
அதேநேரத்தில், மத்திய அரசால் நடத்தப்படும் எட்டு எய்ம்ஸ், ஜிப்மர் (புதுச்சேரி), நிம்ஹான்ஸ் (பெங்களூரு), பிஜிஅய் (சண்டிகார்) ஆகிய கல்லூரிகளுக்குத் தனி நுழைவுத் தேர்வை நடத்திவந்தது.
அகில இந்திய அளவில் ஏன் ஒரே ‘நீட்’ தேர்வு என்ற கேள்வியை எழுப்பியபோது, மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்குப் பல நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டியிருந்தது; அந்தச் சுமையைக் குறைக்கத்தான் ஒரே நுழைவுத் தேர்வு என்று ஒரு பக்கத்தில் சமாதானம் சொல்லிவிட்டு மேற்கண்ட 11 மருத்துவக் கல்லூரிகளுக்குத் தனியே நுழைவுத் தேர்வு நடத்தியது முரண்பாடு அல்லவா.
மிகவும் நெருக்கடியான கரோனா காலமான 2020 ஆம் ஆண்டில் மட்டும் இந்தக் கல்லூரிகளையும் ‘நீட்’ டின் கீழே கொண்டு வந்தது.
15.11.2020 அன்று ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. எட்டு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் உள்பட 11 கல்லூரிகளுக்கு - ‘நீட்’டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, முக்கியத்துவம் வாய்ந்த 11 கல்லூரிகளுக்கு (Institutes of National Importance) இவற்றிற்கென்று INI - CET - (Combined Entrance Test) என்பதன்மூலம் மாணவர்கள் 2021 ஆம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்படுவார்களாம்.
இதற்கான தகவல் கையேட்டில் (Prospectus) குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயம்தான் கவனிக்கத்தக்கதாகும். இந்தக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் அந்தந்த கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு முறை சீராகப் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் இடங்களுக்கு - பிற்படுத்தப்பட்டோருக்குரிய - மாநில அரசுகளால் பின்பற்றக் கூடிய இட ஒதுக்கீட்டை கொடுக்க மறுக்கும் மத்திய பாஜக அரசு இந்த 11 கல்லூரிகளில் மட்டும் இட ஒதுக்கீடு உண்டு என்பது முரண்பாடுதானே?
இதில் இன்னொன்று முக்கிய கவனத்துக்கு உரியதாகும்.
11 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை (Institutes of National Importance) என்பது எந்த அடிப்படையில்? சென்னையில் உள்ள நூற்றாண்டு கண்ட எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி அந்தப் பட்டியலில் வராதா?
‘‘ஒரு நாயைக் கொல்லுவதற்குமுன் அதற்குப் பைத்தியம் பிடித்துவிட்டது’’ என்று காரணம் சொல்லுவதுபோல, இவர்கள் எடுக்கும் - விரும்பும் முடிவுக்கு சில வார்த்தைகளை முன்னொட்டாகச் சேர்த்துக் கொள்வதா?