சென்னை எழிலகத்தில் 'தமிழ்நாடு மாநில இளைஞர் கொள்கை 2017 - ஒரு கண்ணோட்டம்' என்ற தலைப்பில் காணொலி கருத்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் சி. பொன்னையன் தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு மாநில இளைஞர் கொள்கை 2017-யின் நோக்கமானது 'விஷன் தமிழ்நாடு 2023'இன் பரந்த நோக்கங்களை வலுப்படுத்துவதேயாகும்.
மொத்த மக்கள் தொகையில் 74 % இளைஞர்களை கொண்டுள்ள தமிழ்நாடு கூடுதலான மேம்பாட்டினை எட்டுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
சாகசப் பயிற்சி, சமூக சேவை, இளைஞர் பரிமாற்றத் திட்டங்கள் மூலம் இளைஞர்களிடையே அனைத்து ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் திட்டங்களைத் தொடங்கி செயல்படுத்தி கண்காணிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இளைஞர்களுக்கான அனைத்து சேவைகளையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஆண்டுக்கு 11 % வளர்ச்சியுடன் 2 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும். அத்துடன், அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட ஒரு பெரிய மனித வளமிக்க மாநிலமாகவும், ‘தமிழ்நாடு தொலைநோக்கு பார்வை 2023(Vision) ’ ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளபடி மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் செயலர் அனில் மேஷ்ராம், தமிழ்நாடு மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநரும் தமிழ்நாடு மாநில திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநருமான வி. விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும், துறைசார்ந்த உயர் அலுவலர்கள் வல்லுநர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.