இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், "எழுவர் விடுதலைக்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகளை கடந்த பிறகும், அது குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து முடிவெடுக்க அறிவுறுத்தியும் ஆளுநர் கள்ள மௌனம் சாதித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களும், அனைத்து தரப்பு மக்களும் எழுவர் விடுதலைக்கோப்பில் ஆளுநர் உடனடியாகக் கையெழுத்திட வேண்டும் என்பதைத்தான் ஒருமித்த குரலில் எழுப்பி வருகிறார்கள். எழுவரையும் விரைவாக விடுவிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என முன்னாள் சொசிலிட்டர் ஜெனரல் மோகன் பராசரனும் வலியுறுத்தியிருக்கிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது தேச துரோக குற்றமல்ல; நாட்டின் இறையாண்மையைத் தகர்க்கும் எண்ணத்தோடு நடத்தப்பட்ட கொலை வழக்கல்ல; அமைதிப்படையை அனுப்பியதால் வந்த எதிர்வினை. ஆகவே, இதுவொரு பழிவாங்கும் நோக்கத்தோடு நிகழ்த்தப்பட்ட கொலை வழக்கு என்றுகூறி, இவ்வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்திவிட்டது.
இவ்வழக்கிற்குத் தடா சட்டமே பொருந்தாது எனும்போது, தடா சட்டத்தின் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் தண்டனையை அனுபவித்துவருவது மிகப்பெரும் அநீதியாகும். ராஜீவ் காந்தி உயிரிழக்க காரணமாக இருந்த பெல்ட் பாமை தயாரித்தவர் யாரென்றே இதுவரை மத்திய புலனாய்வுத்துறை கண்டறியாத நிலையில், அதற்கு பேட்டரி வாங்கிக்கொடுத்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் பேரறிவாளனை 29 ஆண்டுகளாக சிறைப்படுத்தியிருப்பது எவ்வகையிலும் நியாயமில்லை.
இவ்வழக்கு என்பது இந்தியக் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படியான கொலை வழக்குதான். அதாவது, மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஒரு வழக்கு எனும்போது அவர்களை மாநில அரசு விடுதலை செய்வதற்கு என்ன தடையிருக்க முடியும்?. பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் திரித்து எழுதினேன் என வாக்குமூலத்தைப் பதிவுசெய்த முன்னாள் மத்திய புலனாய்வுத்துறை அலுவலர் தியாகராஜன் ஒப்புக்கொண்டு அதனைப் பிரமாணப்பத்திரமாக உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்திருக்கிறார்.