இது தொடர்பாக அவர் இன்று (நவம்.14) வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராக பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் தற்போது நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
சூரப்பாவின் பதவிக் காலத்தில் பல்கலைக்கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அண்ணா பல்கலைக்கழகச் சட்டம்-1978க்கு உள்பட்டவையாக உள்ளனவா? அவர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக நியமனங்கள், முறையாக செய்யப்பட்டுள்ளனவா? பல்கலைக்கழகத்தால் வசூலிக்கப்பட்ட கட்டணம், நன்கொடை, நிதி நல்கை போன்றவை சரியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா? உள்ளிட்டவற்றை நீதிபதி கலையரசன் ஆணையம் விசாரிக்கும் என்று தமிழ்நாடு அரசின் அரசாணை தெரிவிக்கிறது.
சூரப்பாவுக்கு எதிராக திருச்சியைச் சேர்ந்த சுரேஷ், ‘சேவ் அண்ணா யுனிவர்சிட்டி’ அமைப்பைச் சார்ந்த சி.வரதராஜன், செல்லதுரை மற்றும் ஆர்.ஆதிகேசவன் உள்ளிட்டோர் புகார்கள் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்யவேண்டுமெனில் அரசால் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கும் ஆளுநரே அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.