கரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளன. இருப்பினும் அவற்றை பொதுமக்கள் கடைபிடிக்கின்றனரா என உள்ளாட்சி மற்றும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
'கோவிட்-19 விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'
சென்னை : கோவிட்-19 பரவலைத் தடுக்க அரசு விதித்த விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு முழுவதும், ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சரால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
எனினும், கோவிட்-19 தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில், அரசு வெளியிட்டுள்ள நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது, கட்டாயம் முகக் கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமீறலில் ஈடுபடுவோர் மீது மாவட்ட நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என தெரிவித்துள்ளார்.