நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. முதல் கட்டமாக நெல்லை பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு 79 கோடி ரூபாயில் மூன்றடுக்கு நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஒரு ஆண்டுக்கு முன்பு தொடங்கியது. இரண்டாம் கட்டமாக நெல்லை டவுனில் உள்ள காய்கறி மார்க்கெட்டை இடித்துவிட்டு, இரண்டு வணிக வளாகம் அமைக்கும் பணிகளும் சமீபத்தில் தொடங்கியது.
இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மூன்றாம் கட்டமாக நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள பொருள்காட்சி திடலில் 10.29 கோடி ரூபாயில் பிரமாண்டமான வர்த்தக வளாகம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கே ஏற்கனவே பழைய வணிக வளாகக் கடைகள் இருந்ததால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு, விரைவில் கடையைக் காலி செய்யும்படி உத்தரவிடப்பட்டது.