இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 51 நாள்களாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவர் எப்படியும் மீண்டெழுவார் என நம்பிக்கையோடு காத்திருந்த அனைவருக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இன்று காலமாகிவிட்டார்.
கரோனாவின் கோரப்பிடியிலிருந்து மீளவியலாமல் இன்று பலியான பாடகர் எஸ்பிபிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வணக்கத்தைச் செலுத்துகிறோம்.
இசைக்கு ஈர்ப்பு உண்டு. சொல்லுக்குப் பொருள் உண்டு. எனினும், சொல்லையும் இசையையும் கோர்த்துக் குரலால் இழைத்தும் குழைத்தும் உயிர்ப்பூட்டி, சுவைகூட்டி இயக்கும் ஆற்றல் ஒரு பாடகரின் தனித்திறம் ஆகும். அத்தகைய தனித்திறன் மிக்கவர்களுள் சிறப்புக்குரியவர் எஸ்பிபி.
பன்மொழித் திறன் உள்ளவர். எண்ணிலா விருதுகளை வென்றவர். சாதி, மதம், மொழி, இனம், தேசம் போன்ற அடையாள வரம்புகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரின் நெஞ்சம் கவர்ந்தவர். இறை நம்பிக்கை உள்ளவர்கள், அவருக்காக வழிபாடுகளை மேற்கொள்ளும் அளவுக்கு அவர் அனைவரின் நன்மதிப்பை வென்றவர்.