தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விற்பனையாகாமல் தேங்கிய 11 ஆயிரம் மண் அடுப்புகள்... உடைந்து போன மண்பாண்ட தொழிலாளர்கள்! - ஊரடங்கால் தேக்கமடைந்த மண் அடுப்புகள்

ஒரு குடும்பமே சேர்ந்து உழைத்தால்தான் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மண்பாண்ட பொருள்களை விற்பனைக்கு அனுப்பமுடியும். தற்போது உற்பத்தி அதிகமானலும் அதை அனுப்ப வாய்ப்பில்லை. ஒருவேளை வரும் மாதங்களில் மழை பெய்து விட்டால் அடுத்த மூன்று மாதங்களுக்கு எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறிதான் என மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தேங்கிய 11 ஆயிரம் மண் அடுப்புகள்
தேங்கிய 11 ஆயிரம் மண் அடுப்புகள்

By

Published : Jun 16, 2020, 6:43 PM IST

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் மண்பாண்டத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்கு வசிக்கும் 60க்கும் மேற்பட்டோர் மண்பாண்ட தொழிலை பாரம்பரியமாக செய்துவருகின்றனர். தென்காசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள குளங்களில் அரசின் சலுகை மூலம் இலவசமாக மணலை அள்ளி அதை குளைத்து பக்குவமாக மண் அடுப்புகளை தயார் செய்கின்றனர். இந்த மண் அடுப்புகளுக்கு கேரள மாநிலத்தில் அதிக வரவேற்பு உள்ளது.

மண் அடுப்பு

ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் மண் அடுப்புகள் சுந்தரபாண்டியபுரத்திலிருந்து கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் கரோனோ ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மண்பாண்ட தொழில் முற்றிலுமாக முடங்கியது. இதனால் புதிய அடுப்புகளின் உற்பத்தியும் தடைபட்டது. ஒருபுறம் புதிதாக அடுப்புகள் உற்பத்தி செய்ய முடியாமலும் ஏற்கனவே உற்பத்தி செய்த அடுப்புகளை கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியாமலும் தொழிலாளர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகினர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தொடர்ந்து தொழிலாளர்கள் அடுப்புகளை உற்பத்தி செய்து வருகின்றனர்

மண் அடுப்பு

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர் சுப்பையா கூறுகையில், “கிட்டத்தட்ட 23 வருடங்களாக இந்த தொழிலை செய்து வருகிறேன். தற்போது கரோனோவால் தொழில் முடங்கியுள்ளது. போக்குவரத்தும் இல்லாததால் பொருள்களை எங்கும் அனுப்ப முடியவில்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டுவருகிறோம். அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். தற்போது வாரியத்தின் மூலம் நிவாரணம் கொடுத்துள்ளனர். இது போதுமானதாக இல்லை.

தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, அண்டை மாநிலமான கேரள அரசும் எங்களுக்கு அனுமதி கொடுத்த பிறகுதான் நாங்கள் பொருள்களை ஏற்றிச் செல்ல முடியும். இருப்பு அதிகமாக உள்ளதால் எங்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்றார்.

ஆயிரம் ஆயிரமாக தேங்கிய மண் அடுப்புகள்: மீளுமா மண்பாண்ட தொழில்

மூன்று மாதங்களாக தொழில் முடங்கியுள்ளது. அடுத்து பிரச்னை முடிந்த பிறகு கேரளாவிற்கு சரக்கு அனுப்புவதற்கும் மீண்டும் மூன்று மாதங்கள் ஆகும். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தங்கள் தொழில் முடங்கும் நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கிறார் மண்பாண்ட தொழிலாளர் வீரபாகு. இவர் தொடர்ந்து பேசும்போது, அடுத்து குற்றால சீசன் தொடங்க உள்ளதால் மழை பெய்யும்போது மேலும் தொழில் பாதிக்கும், என்றார்

கடந்த 50 வருடங்களாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ள பாலசுப்பிரமணியம் கூறுகையில், “கரோனோ பிரச்னையால் கிட்டத்தட்ட 11 ஆயிரம் அடுப்புகள் கேரளாவிற்கு அனுப்பமுடியாமல் தேக்கமடைந்துள்ளன. அரசு எங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் கொடுக்கிறது. இதை வைத்து குடும்பம் நடத்த முடியாது, கேரளாவிற்கு பொருள்களை ஏற்றிச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே எங்களுக்கு தேவைப்படுகிற உதவி.

ஒரு அடுப்பு செய்வதற்கு மூன்று நாட்கள் ஆகும். ஒரு குடும்பமே சேர்ந்து உழைத்தால்தான் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பொருள்கள் அனுப்பமுடியும். தற்போது உற்பத்தி அதிகமாக உள்ளது. ஆனால் அதை அனுப்ப முடியவில்லை. ஒருவேளை மழை பெய்து விட்டால் அடுத்த மூன்று மாதங்களுக்கு எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். மழை பெய்தால் குளத்தில் மணல் எடுக்க முடியாது. இது போன்ற பல பிரச்னைகள் உள்ளன” என்றார்.

இதையும் படிங்க: கண்டுகொள்ளப்படாத மண்பாண்டங்கள்: நொறுங்கிய மண்பாண்டத் தொழில்!

ABOUT THE AUTHOR

...view details