தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய ஏரி அமைக்க திட்ட அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க ஆட்சியர் உத்தரவு! - Thiruvachur New Lake construction project

சேலம் : திருவாச்சூரில் புதிய ஏரி அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு அறிக்கையினை தயாரித்து 15 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென பொதுப்பணித் துறைக்கு சேலம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய ஏரி அமைக்க திட்ட அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க ஆட்சியர் உத்தரவு!
புதிய ஏரி அமைக்க திட்ட அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க ஆட்சியர் உத்தரவு!

By

Published : Nov 6, 2020, 12:55 PM IST

சேலம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தை அடுத்த சிறுவாச்சூர் பகுதியில் உள்ள எலந்தவாரி ஓடை மற்றும் சம்படி ஆறு ஆகிய இரண்டையும் இணைத்து புதிய ஏரி அமைப்பதற்கு அம்மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று அத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் இது குறித்து ஊடகங்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர் ," சேலம் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில் உள்ள எலந்தவாரி ஓடை மற்றும் சம்படி ஆறு ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஏரி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

எலந்தவாரி ஓடை மற்றும் சம்படி ஆறு ஆகிய இரண்டும் சடைய கவுண்டன் மலை வனப்பகுதி அடிவாரத்தில் மலைகளில் இருந்து வரக்கூடிய நீரோடு ஒன்று சேர்ந்து, சிறுவாச்சூர் அருகே தேம்படியாறு ஓடையின் வழியாக திருமணிமுக்தாறில் கலந்து வீணாகிறது.

இவ்வாறு, வீணாகும் நீரை சேமித்து வைத்து ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த புதிய ஏரி ஒன்றை அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

அதன் மூலம், சிறுவாச்சூர், வரகூர், நாவக்குறிச்சி மற்றும் புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு தேவையான நீர் கிடைப்பதோடு, அப்பகுதிகளில் வசித்துவரும் மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும் என நம்புகிறோம்.

இந்த புதிய ஏரி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தற்போது மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதற்கான ஆய்வுப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஆய்வுப்பணிகளை விரைந்து முடித்து புதிய ஏரி அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு அறிக்கையினை தயாரித்து 15 நாள்களுக்குள் வழங்கிட வேண்டுமென பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை விரைந்து மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினர் மருதமுத்து, மாவட்ட வன அலுவலர் எம்.முருகன், கூடுதல் இயக்குநர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர்கள் ஆர்.கௌதமன், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் மு.துரை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details