கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலைவாணர் அரங்கில் மூன்றாவது தளத்தில் நடைபெற்றது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று (செப்டம்பர் 16) துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2020-2021ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவை முன் வைத்து உரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரையில்,
1. 2020-2021ஆம் ஆண்டிற்கான முதல் துணை மானியக் கோரிக்கைகளை விளக்கிக் கூறும் விரிவானதொரு அறிக்கை இம்மாமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த துணை மதிப்பீடுகள் மொத்தம் 12,845.20 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன.
2. 2020-2021ஆம் நிதியாண்டின் தொடக்கத்திலேயே கோவிட்-19 பாதிப்பு காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், சுகாதார வசதிகள் வழங்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்குதல், பொது விநியோக அமைப்பின் மூலம் கூடுதல் அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்குதல் மற்றும் அதற்கு உண்டான நிர்வாகச் செலவுகள் ஆகியவற்றால் கூடுதல் செலவினங்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது. இதனால், இந்த ஆண்டின் முதல் துணை மதிப்பீடுகளின் அளவு முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாக உள்ளது. கரோனா கட்டுப்பாடு, தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 9,027.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
3. 2020-2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு 'புதுப் பணிகள்' மற்றும் 'புது துணைப்பணிகள்' குறித்து தெளிவுப்படுத்தி, அதற்கு பேரவையின் ஒப்புதலைப் பெற்று எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை இத்துணை மானியக் நிதிக்கு ஈடு செய்வதும் நமது நோக்கமாகும்.
4. ரேஷன் அமைப்பு மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்களை கரோனா ஊரடங்கு காரணமாக வழக்கத்திற்கு அதிகமாகவும், இலவசமாகவும் உணவுப் பொருள்களை வழங்குதல்/விற்பதால் 3,359.12 கோடி ரூபாய் கூடுதல் தொகை "மானியக் கோரிக்கை எண்.13 உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை)" என்பதன் கீழ் துணை மதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ளது.
5. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், பல்வேறு நல வாரிய உறுப்பினர்களுக்கும் கோவிட்-19 நிவாரண நிதி உதவியாக மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து வழங்க ரூ.3,168.64 கோடி, கரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ. 1,049.56 கோடி என மொத்தம் ரூ. 4,218.20 கோடியை "மானியக் கோரிக்கை ST600.51 இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு" கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6 . கோவிட்-19 சிகிச்சை மருந்துகள், ஆர்.டி.பி.சி.ஆர் மற்றும் நோய் கண்டறியும் சாதனங்கள் கொள்முதலுக்கு, உள் நோயாளிகளுக்கான உணவுச் செலவினங்கள், ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்கு "மானியக் கோரிக்கை எண்.19 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை" கீழ் 1,109.42 கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீடாக செய்யப்பட்டுள்ளது.