சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ரவுடி சங்கர். பல ஆண்டுகளாக சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்த அவர் மீது கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்துவந்தன. இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க சென்னை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இதனிடையே, தனது குழுவினருடன் ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த அவரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது அவர் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தங்களை தற்காத்துக்கொள்ள காவல்துறையினர் ரவுடி சங்கர் மீது எதிர் தாக்குதல் நடத்தியதாக அறியமுடிகிறது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ரவுடி சங்கர் மரணமடைந்ததாக காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்தது.
என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், " கொல்லப்பட்ட தனது மகன் சங்கரின் உடலை இரண்டாவது முறையாக மருத்துவக்குழுவினர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இந்த என்கவுன்ட்டர் கொலை வழக்கை அயனாவரம் காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என கோரியிருந்தார்.