தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ. 16) 2021ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள் மூலமாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்ட வாக்காளர் பட்டியல் குறித்த சிறப்புச் கூட்டம் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.
கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கோட்டாட்சியர் ஜெயராமன், "ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பவானிசாகர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 9 லட்சத்து 54 ஆயிரத்து 397 வாக்காளர்கள் உள்ளனர். 4 லட்சத்து 67 ஆயிரத்து 182 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 87 ஆயிரத்து 184 பெண் வாக்காளர்களும், இதர பாலித்தவர் 31 வாக்காளர்களும் இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு மாவட்டத்திலுள்ள அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தகுந்த அலுவலரிடம் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.