மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் ஏறத்தாழ 200 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் சிறப்பு மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மேலதிக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு தொடர்பான அறிவிப்பு ஒன்று மத்திய அரசின் சுகாதாரத்துறை சார்பில் அரசிதழில் இன்று (அக்டோபர் 28) வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மதுரையில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவக் குழுவில் நிர்வாக உறுப்பினராக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் தலைவரும், ஏபிவிபியின் மாநில தலைவருமான சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் மருத்துவர் சுப்பையா சண்முகம், அதே குடியிருப்பு பகுதியில் வாழ்த்துவரும் பெண்மணி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துவந்ததாக தெரிகிறது.
குறிப்பாக, அந்த பெண்மணியின் வீட்டிற்கு முன்பாக மருத்துவர் சுப்பையா, சிறுநீர் கழிப்பது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டதன் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, மருத்துவர் சுப்பையா சண்முகம் மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டங்களின் கீழ் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி வழக்கு பதியப்பட்டது.
பின்னர் அந்த வழக்கு அளித்த பெண் சிலரால் மிரட்டப்பட்டு, புகார் திரும்பப் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு அப்போது பரவலாக எழுந்தது. இதனிடையே, இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவக் குழுவில் நிர்வாக உறுப்பினராக மருத்துவர் சுப்பையா சண்முகத்தை மத்திய அரசு நியமிப்பதாக அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், "பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டில் வழக்கு பதியப்பட்டவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம்; இது பெண்களை அவமதிப்பதில்லையா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.