வட மற்றும் வட மேற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படை பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் மருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை விரட்டும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆய்வாளர் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் ஈடிவி பாரத் செய்தியாளருடன் நடத்திய உரையாடலில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
தமிழ்நாட்டுக்கு வர வாய்ப்பிருக்கிறதா...
தமிழ்நாட்டுக்கு இந்த வெட்டுக்கிளிகள் படை வர வாய்ப்பில்லை என அரசு தெரிவித்துள்ள நிலையில், பசுமை எங்கிருக்கோ அதனை நோக்கி வெட்டுக்கிளிகள் செல்லும் என்கிறார் அவர். வெட்டுக்கிளிகளின் வலசை (மைகிரேஷன்) குறித்து பேசுகையில், "தட்ப வெப்ப நிலை, காற்றில் உள்ள ஈரப்பதம், காற்றின் திசை, பச்சை வெளி போன்றவற்றை வைத்து வெட்டுக்கிளிகள் தங்களது அடுத்த இடத்தை தேர்வு செய்கின்றன.
தமிழ்நாட்டுக்கு இதுவரை வராததால், நமக்கு வர வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள், ஆனால் எப்போதும் ராஜஸ்தான் மாநிலத்துடன் திரும்பிச் செல்லும் வெட்டுக்கிளிகள் தற்போது அதனைத்தாண்டி தெலங்கானா வரை வந்திருக்கிறது. அதேபோல் ஊட்டி, வயநாடு பகுதியிலும் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை எந்த வகையான வெட்டுக்கிளிகள் என தெரியாது, ஆனால் வந்தால் என்ன செய்ய வேண்டும் என விவசாயிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்றார்.
விவசாய நிலங்களில் ஈக்கள் போல் மொய்த்த 'பாலைவன வெட்டுக்கிளிகள்'
வெட்டுக்கிளிகளை எப்படி கட்டுப்படுத்துவது...
வெட்டுக்கிளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இரண்டு வகைகளை கையாளலாம், ஒன்று பூச்சியை தாக்குவது, மற்றொன்று அந்த பயிரை வெட்டுக்கிளிகளுக்கு பிடிக்காத வகையில் மாற்றுவது. பல நாடுகளில் மாலத்தியான் போன்ற மருந்துகளை தெளிக்கிறார்கள்.
இந்தியாவில் பல இடங்களில் தீயணைப்பு வாகனங்களில் ரசாயன மருந்து தெளிக்கப்படுகிறது. இவை கட்டடங்களில் தீப்பற்றினால், அதனை அணைக்க பயன்படுத்த முடியும், ஆனால் பயிர்களுக்கு தெளிக்க இது பயன் தருமா என்பது கேள்விக்குறியே. வெட்டுக்கிளிகளை தடுக்க மெல்லிசாக சாரல் போன்று மருந்து அடிக்க வேண்டும். இதற்காக டிரோன்கள், விவசாயிகளுக்கு சிறிய அளவிலான டிஸ்க் ஸ்பிரேயர்கள் பலனளிக்கும்.
இயற்கை முறையில், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் பயன்படுத்தலாம். போராக்ஸ் பயன்படுத்தினால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது, அதேநேரத்தில் வெட்டுக்கிளிகள் மயங்கி விழும் என்கிறார்கள்".