கரோனா ஊரடங்கு காலத்தில் முழுக் கட்டணத்தைச் செலுத்தும்படி, சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி (எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி) நிர்பந்திப்பதாகக் கூறி மாணவர்கள் சார்பில் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார்.
இந்த மனுவானது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று (செப். 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்லூரி நிர்வாகம் சார்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞர்கள்," அக்டோபர் 10ஆம் தேதிக்குள் 40 விழுக்காடு கட்டணத்தை முதல் தவணையாகவும், மீதமுள்ள 60 விழுக்காடு தொகையை இரண்டு தவணைகளாகவும் வசூலிக்க கல்லூரி தரப்பு தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்தனர்.
அதற்கு மாணவர்கள் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞர், "தனியார் பள்ளிகளைப் போல கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட கட்டணத்தில் 75 விழுக்காட்டை மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிர்ணயிக்க வேண்டும். கல்லூரி தரப்பில் சொல்லப்படுவதைப் போல ஆன்லைன் வகுப்புகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் எதையும் வழங்கவில்லை" எனத் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், 40 விழுக்காடு கட்டணத்தை அக்டோபர் 29ஆம் தேதிக்குள் செலுத்த உத்தரவிட்டு, ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வகுப்புகளுக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அக்டோபர் 5ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அறிவுறுத்தி விசாரணையை ஒத்திவைத்தது.