இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அயோத்திதாச பண்டிதருக்கும், தந்தை பெரியாருக்கும் முன்பாகவே மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடிய அத்திப்பாக்கம் அ. வெங்கடாசல நாயகரின் 123ஆவது நினைவு நாள் நவம்பர் 3ஆம் நாளான நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.
எளிய மக்களின் நிலவுரிமைக்காக வலியவர்களை எதிர்த்துப் போராடிய ஈடு இணையற்ற போராளியின் நினைவை இந்த நாளில் நாம் போற்றுவோம்.
செங்கல்பட்டு மாவட்டம் அத்திப்பாக்கம் கிராமத்தில் 1799ஆம் ஆண்டில் பிறந்த அ.வெங்கடாசல நாயகர், தமிழ் - ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்று சென்னையில் ஆசிரியராக பணியாற்றினார். மூளக்கொத்தளம் சுண்ணாம்புக் காளவாயில் வணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டினார். ஈட்டிய பொருளைக் கொண்டு ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைக்காமல், ஆங்கிலேயர்களின் அரைகுறை புரிதலால் வன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட பெருந்துரோகம் மற்றும் வாழ்வாதாரப் பறிப்பை எதிர்த்து, இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கும், மகாராணிக்கும் எட்டும் வகையில் 30 ஆண்டுகள் தொடர் போராட்டம் நடத்தி வன்னியர்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடியதால் தான் வரலாற்று நாயகர் ஆனார்.
19-ஆவது நூற்றாண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த நிலங்களுக்கு உரிமை வழங்க நினைத்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் எல்லீஸ், அது குறித்து அரசுக்கு பரிந்துரை அறிக்கை வழங்குவதற்காக பொம்ம கொண்ட சாஸ்திரி என்கிற சங்கரய்யா என்பவரை நியமித்தார்.
ஆனால், வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்யாத சங்கரய்யா, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் அவற்றை விவசாயம் செய்து வரும் பாயக்காரி எனப்படும் வன்னியர்களுக்கு சொந்தமானவை அல்ல; அவை மிராசுகளுக்கு சொந்தமானவை என்று அறிக்கை அளித்தார். அதனடிப்படையில், பெரும்பான்மையான நிலங்களை வன்னியர்களிடமிருந்து பறித்து பிற சமுதாய மிராசுகளுக்கு ஆங்கிலேயர் அரசு வழங்கியது.
இது மிகப்பெரிய அநீதி என்பதை அறிந்த வெங்கடாசல நாயகர், வன்னியர்களின் நில உரிமையை மீட்டெடுப்பதற்கான பெரும் போராட்டத்தை 1860ஆம் ஆண்டில் தொடங்கினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண் நிலங்களை சீரமைத்து பயிர் செய்து வருபவர்கள் வன்னியர்கள் தான். மாவட்டத்தில் மொத்தமுள்ள நிலங்களில் ஏழில் 4 பங்கு வன்னியர்களின் மன்னவேடு ஊர்களாக இருந்தன. ஆனால், அதில் 87.50 விழுக்காடு நிலங்களை மிராசுதார்கள் பிடுங்கிக் கொண்டனர் என குற்றஞ்சாட்டிய வெங்கடாசல நாயகர், மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வன்னிய மக்களை சந்தித்து, ஆதாரங்களைத் திரட்டினார்.
அவற்றை ஆங்கில ஊடகங்களில் வெளியிடச் செய்ததுடன், சென்னை, கொல்கத்தா, லண்டன் ஆகிய இடங்களில் உள்ள அலுவலர்களுக்கும் தெரிவித்தார்.