இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்," கரோனாவின் கோரப் பிடியில் சிக்கியதால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது கண்ணுக்கு தெரியாமல் கலால் வரியை உயர்த்தி, வருமானத்தை பெருக்கி, நிதி பற்றாக்குறையை போக்குவதற்கு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. சில நாள்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கலால் வரியை உயர்த்தியிருக்கிறது.
2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்த போது ஒரு லிட்;டர் பெட்ரோலில் கலால் வரி ரூபாய் 9.48 ஆகவும், டீசலில் ரூபாய் 3.56 ஆகவும் மிகமிக குறைவாக இருந்தன. ஆனால், தற்போது பெட்ரோல் மீதான கலால் வரி ரூபாய் 32.98 ஆகவும், டீசலில் ரூபாய் 31.83 ஆகவும் படிப்படியாக கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
அண்மையில், கூடுதல் கலால் வரி பெட்ரோல் மீது ரூபாய் 2 உயர்த்தியதோடு, சாலை செஸ் வரி ஒரு லிட்டருக்கு ரூபாய் 8 ஆக உயர்த்தியிருக்கிறது.
மொத்தத்தில் பெட்ரோல் விற்பனை விலையில் வரியாக 69.40 சதவிகிதமும், டீசலில் 69.30 சதவிகிதமும் மத்திய - மாநில அரசுகள் வரியாக வசூலித்து கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
சர்வதேச சந்தையில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 42 டாலராக குறைந்திருக்கிறது.